வேலூர் மாநகராட்சியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் டைபாய்டு காய்ச்சல் பரவுகிறதா? மருத்துவ குழுவினர் 50 இடங்களில் ஆய்வு
வேலூர், செப்.30: வேலூர் மாநகராட்சியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் டைபாய்டு காய்ச்சல் பரவுகிறதா? என சிஎம்சி மருத்துவ குழுவினர் 50 இடங்களில் ஆய்வு செய்தனர். வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு சிஎம்சி மருத்துவமனை சார்பில் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு டைபாய்டு காய்ச்சலுக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி பகுதிகளில் தேங்கி நிற்கும் கழிவுநீரின் மூலம் டைபாய்டு பரவுகிறதா? என சிஎம்சி மருத்துவமனை குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தர மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, சிஎம்சி மருத்துவ குழுவினர் அசுத்தமான தேங்கி நிற்கும் கழிவு நீரால் டைபாய்டு காய்ச்சல் பரவுகிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, வேலூர் அண்ணா சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் உள்ள தேங்கியுள்ள கழிவு நீரின் மாதிரி எடுத்து என மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மாநகரட்சி பகுதிகளில் உள்ள அசுத்தமான நீரின் மூலம் டைபாய்டு காய்ச்சல் பரவுகிறதா? என்று சிஎம்சி மருத்துவ குழுவினர் 50 இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த நீரில் வேறு ஏதேனும் கிருமிகள் மூலம் நோய் பரவ வாய்ப்பு உள்ளதா?, அந்த நோய்க்கான மருந்துகள் கண்டுபிடிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றனர்.


