Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தவெக கட்சி துண்டு, கொடியுடன் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் போலீசார் வழக்குப்பதிவு சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்

பள்ளிகொண்டா, ஜன.28: சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தவெக கட்சியின் கொடி மற்றும் தலையில் துண்டினை கட்டிக் கொண்டு பைக்கில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் மீது பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சக்திவேல்(25). இவர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் பைக் ரேசில் ஈடுபடுவது போல் ரீல்ஸ் செய்து பதிவு செய்து வந்துள்ளார். சில சமயங்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டது சம்பந்தமாக காவல் நிலையத்தில் சில வழக்குகள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் தொடங்கிய தவெக கட்சியில் இவர் தொண்டராக உள்ளார் என கூறப்படுகிறது. இதனையடுத்து இவர் பைக் ரேஸ் ரீல்ஸ் வீடியோக்களை எடுக்கும்போது விஜய்யின் தவெக கட்சியின் கொடி மற்றும் துண்டு ஆகியவற்றை பயன்படுத்தி வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று சக்திவேல் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் விதமாக தற்போது பணிகள் நடைபெற்று வரும் சென்னை-பெங்களூரு அதிவிரைவுச்சாலையில் காவேரிப்பாக்கம் அருகே 3 பைக்குகளை நிறுத்திவிட்டு நண்பர்களுடன் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்துள்ளார்.

அதில், சாலையின் நடுவே வட்டமாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்தும், வாயில் பெட்ரோல் ஊற்றி தீப்பந்தம் கையில் வைத்து ஊதி நெருப்பு வளையத்தை ஏற்படுத்தியும் வீடியோ எடுத்துள்ளனர். மேலும், தவெக கட்சி துண்டினை தலையில் கட்டி கொண்டும், கட்சி கொடியினை இரு கைகளில் பிடித்து கொண்டு பைக் மீது ஏறி நின்று அதிவேகத்தில் 200 மீட்டர் வரை சென்றவாறு ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். ரீல்ஸ் வீடியோ எடுத்த அனைத்தையும் சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் வலைதளம் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ அனைத்தும் வைரலான நிலையில், மாவட்ட எஸ்பி மயில்வாகனனுக்கு இதுகுறித்து புகார் பறந்துள்ளது. அதனையடுத்து இருசக்கர வாகனத்தின் பதிவெண் வைத்து ஆய்வு செய்ததில் அவர் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து எஸ்பி உத்தரவின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் சம்பந்தப்பட்ட வாலிபர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.