கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் என்று கூறி இன்ஜினியரிடம் ரூ.4.92 லட்சம் மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரர் கைது: வேலூர் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
வேலூர், செப்.26: கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ததால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி இன்ஜினியரிடம் ரூ.4.92 லட்சம் மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரரை வேலூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். வேலூர் மாநகராட்சி விருப்பாச்சிபுரம் அடுத்த பலவன்சாத்து குப்பத்தை சேர்ந்தவர் பிரதீப் குமார் (29). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வந்தார்.
இவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாட்ஸ் அப் மூலம் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு உள்ளார். அவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக சம்பாதிக்கலாம் என்று அது தொடர்பான குறுந்தகவலை அனுப்பி உள்ளார். தொடர்ந்து இருவரும் பேசி பழகி வந்துள்ளனர். இந்தநிலையில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யுமாறு அந்த மர்ம நபர், பிரதீப்குமாருக்கு ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதை நம்பிய பிரதீப்குமார் ரூ.4 லட்சத்து 92 ஆயிரத்தை அவருக்கு அனுப்பி உள்ளார். தொடர்ந்து சில வாரங்கள் கழித்து முதலீட்டுக்கான லாபத் தொகையை பிரதீப்குமார் அவரிடம் கேட்டுள்ளார். அவர் பணம் தருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார். தொடர்ந்து பணத்தை தருமாறு வற்புறுத்தவே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ததால் நஷ்டம் அடைந்து விட்டேன். என்னிடம் தற்போது பணம் இல்லை.
மேலும் 2 பேரை முதலீடு செய்ய வைத்தால் பணம் தருவதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதீப்குமார் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரஜினிகுமார், எஸ்ஐ சதீஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பிரதீப் குமாரை ஏமாற்றியது ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி காவனூர் சேர்ந்த சுதர்சன் (32) என்பதும் அவர் ராணுவத்தில் வேலை செய்து பணியை ராஜினாமா செய்து விட்டு, அதே பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்து நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை நேற்று சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.


