ஒடுகத்தூர்- நேமந்தபுரம் இடையே ரூ.8.25 கோடியில் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணி தீவிரம்: கலெக்டர் திடீர் ஆய்வு
ஒடுகத்தூர், அக்.22: ஒடுகத்தூர்-நேமந்தபுரம் இடையே ஆற்றின் குறுக்கே ரூ.8.25 கோடியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை கலெக்டர் லீலா அலெக்ஸ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஒடுகத்தூர் பகுதியில் உத்திர காவேரி ஆறு செல்கிறது. இந்த ஆற்றுக்கு மறுபக்கம் நேமந்தபுரம், அத்திகுப்பம், ஓட்டேரிபாளையம் போன்ற பல்வேறு கிராமங்கள் உள்ளது. இப்பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் அன்றாட தேவைகள் மற்றும் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்ல வேண்டும் என்றால் ஒடுகத்தூருக்கு வந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
அவ்வாறு ஒடுகத்தூர் பகுதிக்கு வந்து செல்லும் மக்கள் அங்குள்ள உத்திர காவேரி ஆற்றின் குறுக்கே உள்ள தரை பாலத்தை கடக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அக்கறையில் உள்ள மக்கள் 2, 3 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை இருந்து வந்தது. மேலும், பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தரை பாலம் தற்போது சேதமடைந்து விட்டதால் புதிய மேம்பாலம் அமைத்து கொடுக்கும்படி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, ஒடுகத்தூர்- நேமந்தபுரம் இடையே ஆற்றின் குறுக்கே கடந்த திமுக ஆட்சியில் ரூ.8.25 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து மேம்பாலம் கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பணிகள் 90 சதவீம் முடிந்து விட்டது. தற்போது ஆற்றில் நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் பொதுமக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் ஆற்றை கடந்து செல்லும் போது தண்ணீரில் தவறி விழுந்தார். அவரை அப்பகுதி இளைஞர்கள் மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கும் பொதுமக்களின் நலனுக்காக மேம்பாலத்தின் இருபுறமும் தற்போது மண் கொட்டி சமன் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நேற்று மேம்பால பணிகளை கலெக்டர் லீலா அலெக்ஸ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மேம்பால பணிகள் தரமாக அமைக்கப்பட்டுள்ளதா?, எந்த அளவிற்கு பணிகள் முடிந்துள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், மேம்பால பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதேபோல் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் நடந்து வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை பார்வையிட்டு பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர் குமார் உட்பட அரசு அதிகாரிகள், பணியாளர்கள் உடனிருந்தனர்.


