பெங்களூருவில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்த ஓய்வு பெற்ற பெண் ரயில்வே அதிகாரி வீட்டில் 20 சவரன் நகைகள் திருட்டு: காட்பாடியில் மர்ம ஆசாமிகள் கைவரிசை
வேலூர், அக்.22: காட்பாடியில் ஓய்வு பெற்ற பெண் ரயில்வே அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி செங்குட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி மணவாளன். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி மீராபாய்(75). இவரும் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகன்கள் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர். மகள் பெங்களூருவில் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த 11ம் தேதி மீராபாய், பெங்களூருவில் வசிக்கும் தனது மகள் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் காலை இவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக அவரது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் மீராபாய்க்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதனால் உடனடியாக காட்பாடிக்கு புறப்பட்டு வந்த மீராபாய் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் உள்பக்க அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறி கிடந்ததையும், பீரோ லாக்கரில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகளும், பணமும் திருட்டு போயிருந்ததையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுதொடர்பாக மீராபாய் அளித்த புகாரின்பேரில், எஸ்பி சிவராமன், டிஎஸ்பி விஜயகுமார், காட்பாடி இன்ஸ்பெக்டர் தயாளன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் நிகழ்விடத்தில் தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து காட்பாடி-சித்தூர் சாலை வரை வந்து நின்று விட்டது.
இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடம் உட்பட சுற்றுப்புறங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த வாரம் இதே செங்குட்டை பகுதியில் வீட்டின் பூட்டு உடைத்து பணம், நகைகள் திருட்டு போனது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அடுத்த சில நாட்களில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ‘சம்பவம் நடந்ததை வைத்து பார்க்கும்போது, மீராபாய் வெளியூர் செல்லும் தகவல் அறிந்தவர்களே திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்’ என்றனர்.


