கே.வி.குப்பம் அருகே இருதரப்பு மோதல் விவகாரம்; நவராத்திரி விழாவுக்காக திறந்தஅம்மன் கோயிலுக்கு மீண்டும் ‘சீல்’ அதிகாரிகள் நடவடிக்கை
கே.வி.குப்பம், அக்.22: கே.வி.குப்பம் அருகே கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மூடப்பட்ட அம்மன் கோயில் நவராத்திரி விழாவுக்காக திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. நவராத்திரி விழா முடிந்ததையடுத்து கோயில் மீண்டும் அதிகாரிகள் முன்னிலையில் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த காளாம்பட்டு பகுதியில் சக்திகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் பிரச்னை ஏற்பட்டது. அப்போது இருதரப்பு மோதல் காரணமாக கோயிலை அறநிலையத்துறையினர் பூட்டி தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனால் கடந்த 16 ஆண்டுகளாக கோயில் பூட்டப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஆண்டிற்கு ஒருமுறை நவராத்திரி விழாவின்போது மட்டும் திறக்கப்பட்டு வழிபாடு நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஆண்டு தோறும் நவராத்திரி முதல் நாள் திறக்கப்பட்டு முடியும் வரை கோயில்களில் கொலு வைத்து சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி கடந்த 11ம்தேதி தாசில்தார் சித்ரா தலைமையிலான வருவாய்துறையினர், அறநிலையத்துறை அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் கோயில் திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நவராத்திரி பூஜைகள் நடைபெற்று வந்தது.
இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விஜயதசமியான நேற்று முன்தினம் பூஜைகள் நிறைவடைந்த பின்னர் தாசில்தார் சித்ரா தலைமையிலான வருவாய் துறையினர், அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் கோயில் மீண்டும் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.


