வேலூர், ஆக.21: சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் எதிரே போக்குவரத்து காவல் நிலைய கட்டிடம் கட்ட டிஆர்ஓ சுரேஷ் நேற்று ஆய்வு செய்தார். வேலூர், காட்பாடி, குடியாத்தம், சத்துவாச்சாரி ஆகிய இடங்களில் போக்குவரத்து காவல் நிலையங்கள் இயங்கி வருகிறது. இந்த காவல் நிலையங்களில் வேலூரில் மட்டும் தனியாக காவல் நிலைய கட்டிடம் செயல்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் சட்ட, ஒழுங்கு காவல் நிலையங்களில் ஒரு பகுதியாக இயங்கி வருகிறது. இந்நிலையில் சத்துவாச்சாரி போக்குவரத்து காவல் நிலையம் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான இடங்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன்படி வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள நெடுஞ்சாலைத்துறையினர் பராமரித்து வரும் இடத்தில் புதிய போக்குவரத்து காவல் நிலையம் கட்டுவதற்கான இடத்தை டிஆர்ஓ சுரேஷ் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தாசில்தார் பழனி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் உட்பட பலர் இருந்தனர்.



