வேலூர், ஆக.21: வேலூர் அருகே நள்ளிரவில் சந்தன மரத்தை வெட்டி கடத்தியவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். வேலூர் அருகே அப்துல்லாபுரம் குடிசை கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மர்ம நபர்கள் சிலர் சுற்றி திரிந்துள்ளனர். இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் எழில் வேந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த 3 பேரில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
ஒருவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் வேலூர் சாத்துமதுரை பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஏழுமலை (58) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அந்த கிராமத்தில் உள்ள நீதி மாரியம்மன் கோயில் அருகே இருந்த சந்தன மரம் ஒன்றை வெட்டியது தெரிய வந்தது. மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த மூன்று சத்தன மர துண்டுகளையும், ஒரு பைக், மரம் அறுக்கும் கருவியையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய 2 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஏற்கனவே சந்தனமரம் வெட்டி கடத்தப்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் பறிமுதல் செய்த சந்தன மரம் மற்றும் பிடிபட்ட வேலுவை வேலூர் வனத்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர். வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



