Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அதிக விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து: வேளாண் அதிகாரி எச்சரிக்கை

வேலூர், ஆக.20: வேலூர் மாவட்டத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குனர் எச்சரித்துள்ளார். வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஸ்ரீவித்யா கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் பயிர்களுக்கும் தேவையான உரங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. யூரியா 2,741 டன், டிஏபி 871 டன், பொட்டாஷ் 774 டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 5,055 டன், சூப்பர் பாஸ்பேட் 461 டன், இயற்கை உரங்கள் 33 டன் என மொத்தம் 9,942 டன் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்துள்ள பயிர் மற்றும் சாகுபடி பரப்பிற்கு ஏற்றவாறு தேவையான உரங்களை ஆதார் மற்றும் சிட்டா நகல் கொடுத்து பிஓஎஸ் கருவி மூலம் பட்டியலிட்டு ரசீதுடன் பெ‌ற்று கொள்ளலாம். அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை மட்டும் வழங்க வேண்டும். யூரியா உரத்துடன் பிற இணை இடுபொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது.

பிஓஎஸ் கருவி மூலம் பட்டியலிட்டு விவசாயிகளுக்கு ரசீது வழங்க வேண்டும். யூரியா உரத்தை நெல் மற்றும் பிரதான பயிர்கள் சாகுபடி பரப்புக்கு ஏற்றவாறு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். விவசாயிகள் யூரியா உரத்தை மட்டும் பயன்படுத்தாமல் ஒருங்கிணைந்த உர மேலாண்மை முறைகளை கடை பிடிக்க வேண்டும்.

வேளாண்மை துறை மூலம் மானியத்தில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், பசுந்தாள் உரங்களை பயன்படுத்தி மண் வளத்தையும் மேம்படுத்த வேண்டும். மேலும் விலை குறைவாக உள்ளது என்பதற்காக யூரியா உரத்தை மட்டும் அதிகளவு பயன்படுத்துவதால் பயிருக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்காது. அதனால் பூச்சி நோய் தாக்குதல் அதிகரிக்கும். மேலும் மண் வளத்தை பாதுகாக்க யூரியா மண்ணில் இடுவதை குறைத்து இலை வழியாக நேனோ யூரியா தெளிக்கலாம்.