வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் வெளியே காய வைத்திருந்த துணிகளை சுருட்டிச் சென்ற திருடன்: கடியாத்தத்தில் பரபரப்பு
குடியாத்தம், ஆக.19 : குடியாத்தத்தில் வீட்டை பூட்டி வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டின் கதவை உடைக்க முயன்று தோல்வியடைந்த திருடன், வெளியே காய வைத்திருந்த துணிகளை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் எதிரில் ஆற்றோரம் பகுதியை சேர்ந்தவர் சி.செல்வம் (47). இவர் நேற்று முன்தினம் சென்னைக்கு சென்றுவிட்டு இரவு 12 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்ட தடயங்கள் இருந்துள்ளது.
ஆனால் வீட்டிற்குள் எதுவும் திருட்டு போகவில்லை. கதவின் பூட்டை உடைக்க முடியாமல் ஏமாற்றமடைந்த திருடன் வீட்டின் வெளியே கொடியில் காய வைத்திருந்த சட்டைகளை சுருட்டிக்கொண்டு சென்றுள்ளான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த செல்வம், குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக குடியாத்தம் பகுதியில் இதுபோன்ற சிறு சிறு திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



