வேலூர், ஆக.14: காட்பாடி ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்தவர்கள் குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடி வருகின்றனர். காட்பாடி ரயில் நிலையத்தின் வழியாக கஞ்சா கடத்துவதாக வேலூர் மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ சிலம்பரசன் தலைமையிலான போலீசார் ரயில்களில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது 1வது பிளாட்பாரத்தில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அது யாருடையது என விசாரித்தபோது கொண்டுவந்தது யார் என தெரியவில்லை. இதையடுத்து போலீசார் பையை சோதனை செய்தனர். அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதை பறிமுதல் செய்த மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை கடத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அந்த பையை யார் கொண்டு வந்தது என தேடி வருகின்றனர்.



