சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வேலூர் கோட்டையில் பழைய கட்டிடங்களை புனரமைக்க திட்டம்: தொல்லியல்துறை துணை பொறியாளர் ஆய்வு
வேலூர், ஆக.13: சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், வேலூர் கோட்டையில் உள்ள பழைய கட்டிடங்களை புனரமைக்கும் திட்டத்திற்காக, தொல்லியல்துறை கண்காணிப்பு துணை பொறியாளர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். வேலூர் கோட்டை 16ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். இக்கோட்டையின் உள்ளே ஜலகண்டேஸ்வரர் கோயில், அரசு அருங்காட்சியகம், திப்பு மகால், பேகம் மகால், கண்டி மகால், செயின்ட் ஜான்ஸ் தேவாலயம் மற்றும் பழமையான மசூதி போன்ற முக்கிய சின்னங்களும் கட்டிடங்களும் உள்ளன.
இந்நிலையில் கோட்டையில் தொல்லியல் துறை கண்காணிப்பு துணை பொறியாளர் பரணிதரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது கோட்டையில் பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்கள் தன்மை குறித்தும், மதில் சுவர் நடைபாதை, அருங்காட்சியகம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இன்னும் எந்த மாதிரியான திட்டங்களை வகுப்பது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வேலூர் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அகல்யா உடன் இருந்தார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் கோட்டையில் உள்ள கட்டிடங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அந்த கட்டிடத்தின் உறுதி தன்மை, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கோட்டையின் வளர்ச்சிக்கு என்னென்ன தேவை? என்பது தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கையாக தயாரித்து டெல்லியில் உள்ள தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றார்.



