Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

காட்பாடி வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பண்டல்கள் பறிமுதல்: கடத்தல் ஆசாமிகளை தேடும் போலீஸ்

வேலூர், ஆக.12: காட்பாடி வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பண்டல்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட் போன்ற வடமாநிலங்களில் இருந்து காட்பாடி வழியாக பெங்களூரு மற்றும் கேரளா செல்லும் விரைவு ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இவற்றை கடத்தி வரும் ஆசாமிகள் கஞ்சா பார்சல்களை 2ம் வகுப்பு பொதுப்பெட்டி, முன்பதிவு பெட்டிகளில் சீட்டுகளின் அடியில் வைத்து விட்டு தூரமாக அமர்ந்து ரயிலில் பயணிக்கின்றனர்.

திடீரென ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்புப்படையினர், போதை பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ரயில்களில் சோதனையிடும்போது தப்பிப்பதற்கான வழியாக இதனை கடத்தல் ஆசாமிகள் கையாள்கின்றனர். ஒருவேளை கஞ்சா பிடிப்பட்டால் அமைதியாக விட்டு விடுகின்றனர். சோதனையில் தப்பி தாங்கள் கடத்த நினைக்கும் இடம் வந்தவுடன் நைசாக கஞ்சா பார்சல்களை ரயில் நிலையம் முன்பாகவே எடுத்து வெளியில் வீசி விட்டு பின்னர் ரயில் நிலையத்தில் இறங்கி பார்சல்களை எடுத்துக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் தமிழக ரயில்வே போலீஸ் டிஜிபி வன்னியபெருமாள், எஸ்பி ஈஸ்வரன் ஆகியோர் கண்காணிப்பில், தனிப்படை அமைக்கப்பட்டு ரயில்களில் தீவிர கஞ்சா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முன்தினமும் காட்பாடி வழியாக சென்ற ரயிலில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நேற்று அதிகாலை 3 மணியளவில், காட்பாடி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில், எஸ்எஸ்ஐ பத்மராஜா மற்றும் போலீசார் காட்பாடி ரயில் நிலையம் 3வது பிளாட்பாரத்தில் வந்து நின்ற ஹவுரா-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புற பொதுப்பெட்டியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பயணிகள் யாரும் உரிமை கோராத நிலையில் இரண்டு கைப்பைகள் கேட்பாரற்றுக் கிடந்தது கண்டறியப்பட்டது. அவற்றை சோதனை செய்தபோது, அதில் 2 பொட்டலங்களில் தலா 7 கிலோ கஞ்சா என 14 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், அடுத்து வந்த ஹவுரா-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலில், காட்பாடி ரயில்வே போலீஸ் எஸ்எஸ்ஐ பத்மராஜா தலைமையிலான ரயில்வே போலீசார் திருப்பதியில் இருந்து ஒவ்வொரு பயணிகள் பெட்டியிலும் சோதனையிட்டு வந்தபோது காட்பாடியில் ரயில் வந்து நின்ற நிலையில் பொதுஜன பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 2 டிராவல் பேக்கை கண்டெடுத்தனர். அதில் சோதனையிட்ட போது, மொத்தம் 28 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பான் மசாலா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இந்த இரண்டு கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் ஆசாமிகளை சிசிடிவி கேமராக்கள் கண்காணித்து தேடி வருகின்றனர்.