வேலூர், ஆக.12: காட்பாடி அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சிங்காரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் என்கிற அஜித்(26), டிரைவர். இவர் காட்பாடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு சிறுமியை கடத்திச் சென்று அஜித், திருமணம் செய்துள்ளார். இதற்கிடையில், குழந்தை திருமணம் தொடர்பாக 1098 என்ற எண்ணிற்கு புகார் வந்தது. அதன்பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில் சிறுமியை கடத்தி, திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து காட்பாடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அஜித்தை கைது செய்தனர். இந்த வழக்கு வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அஜித்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.23 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மோனிகா உத்தரவிட்டார். இதையடுத்து, அஜித்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று வேலூர் சிறையில் அடைத்தனர்.



