Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மாவட்டங்களுக்கு அரசு பயணம் மேற்கொள்ளும் முக்கிய பிரமுகர்களுக்கான செலவினங்கள் மேற்கொள்ள ரூ.6.85 கோடி நிதி ஒதுக்கீடு

வேலூர், ஆக.12: தமிழ்நாட்டிற்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசின் உயரதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் அரசு முறை ஏற்பாடுகளுக்காக நடப்பாண்டு ரூ.6 கோடியே 85 லட்சத்தை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2024ம் ஆண்டின் அரசாணைப்படி, மாவட்ட கலெக்டர்கள், முக்கிய பிரமுகர்களின் தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து ஆகிய ஒவ்வொரு பிரிவிற்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.50 ஆயிரம் மட்டுமே செலவிட அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சமீபகாலமாக குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இதனால் நடைமுறையில் செலவுகள் அதிகரித்து, நிலுவைத் தொகைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, முக்கிய பிரமுகர்களின் வருகை எண்ணிக்கையின் அடிப்படையில் மாவட்டங்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

‘ஏ’ பிரிவில் வரும் கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், நீலகிரி, திருச்சி, திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.2 கோடியும், ‘பி’ பிரிவில் வரும் திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு, சேலம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.1.40 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ‘சி’ பிரிவில் வரும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், தருமபுரி மாவட்டங்கள் உட்பட 23 மாவட்டங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வீதம் ரூ.3.45 கோடியும் என மொத்தம் ரூ.6 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடானது மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் வருகைக்கான செலவினங்களுக்கு பொருந்தாது. மாவட்ட கலெக்டர்கள் இந்த நிதியை வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப பகிர்ந்தளித்து முறையாகப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்று நேற்று தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.