தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்க விவரம் சேகரிப்பு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில்
வேலூர், டிச.10: அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்க விவரங்கள் சேகரித்து அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்களின் தனித்திறமை வெளிப்படுத்தும் வகையில் கலை திருவிழா போட்டி நடத்தி மாநில அளவில் வெற்றி பெறும் தலா 3 மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படுவதுடன், வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். இந்நிலையில் அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்துறை பயிற்சி மையங்கள் ஸ்கூல் ஐடிஐ அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு விவரங்களை அனுப்பி வைக்க பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு பள்ளியிலும் ஐடிஐக்கு குறைந்தபட்ச நிலத்தேவையாக 50 சென்ட் இருக்க வேண்டும். ஏற்கனவே கட்டப்பட்ட செய்முறை அறைகள், ஆய்வகங்கள் அல்லது பிற கட்டிடங்கள் பயன்பாடின்றி அல்லது குறைந்த பயன்பாட்டில் இருக்கும் நிலையில் இருந்தால் அவற்றை ஐடிஐ அமைப்பதற்கு பயன்படுத்தலாம். தொழில் பயிற்று நிலையங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். தொழில் மண்டலங்கள், தொழிற்சாலைகள், தொழில்துறை பகுதிகளுக்கு அருகிலுள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதன் மூலம் தொழில் தொடர்புகள் மற்றும் மாணவர்களின் வேலை வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும்.
எனவே இந்த வசதிகள் கொண்டுள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை தேர்ந்தெடுத்து ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


