Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மா விவசாயிகளுக்கு ரூ.4ஆயிரம் மானியம் மே மாதத்தில் இருந்து கணக்கிட்டு வழங்க வேண்டும்: விவசாயிகள் கலெக்டரிடம் மனு

வேலூர், ஆக.8: வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம், குடியாத்தம், காட்பாடி ஒன்றியங்களில் மாங்காய் விளைச்சல் அதிகமாக உள்ளது. இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மாங்கூழ் தொழிற்சாலைகளுக்கு மாங்காய்களை சப்ளை செய்து வந்தனர். இந்நிலையில் அங்கு விளைச்சல் அதிகரித்த காரணத்தால் சில ஆண்டுகளாக மாங்கூழ் தொழிற்சாலைகள் தமிழக விவசாயிகளிடம் மாங்காய் கொள்முதல் செய்வதில்லை. அதோடு நடப்பு ஆண்டு மா விளைச்சல் அதிகரித்ததால் போதிய விலை கிடைக்காமலும் மா விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதற்கிடையில் போதிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட தங்கள் மாநிலங்களை சேர்ந்த மா விவசாயிகளுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில அரசுகள் டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தன. அதேபோன்று தங்களுக்கும் ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழக மா விவசாயிகளும் தமிழக அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் வேலூர் மாவட்டம் பரதராமியிலும் இதற்காக போராட்டம் நடந்தது.

இந்த நிலையில் ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து மா விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ஜூலை மாதத்தில் கணக்கிட்டு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தன. இதனை மே மாதம் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட அனைத்து மாங்காய் உற்பத்தி விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் நேற்று கலெக்டர் லீலா அலெக்ஸிடம் மனு அளித்தனர். கலெக்டரிடம் அளித்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

விவசாயிகளுக்கு மாங்காய் டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் மானியம் வழங்க மத்திய மற்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மானியத்தை கடந்த மாதம் 8ம்தேதியில் இருந்து வழங்கபடும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் மாங்காய் அறுவடை முன்கூட்டியே முடிந்துவிட்டதால் விவசாயிகள் நலன் கருதி, மே 8ம்தேதியில் இருந்து கணக்கெடுத்து விவசாயிகளுக்கு மானியம் வழங்கவேண்டும்.

அதேபோல் கடந்த ஜூன் 16ம்தேதி ஆந்திரா, கர்நாடக மாநில அரசுகள் மாங்காய் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கியதைப்போல் தமிழகத்திலும் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதன் காரணமாக பரதராமி போலீசில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை திரும்ப பெறவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.