Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கே.வி.குப்பம் அருகே தொடர்ந்து 2 நாட்களாக விவசாய நிலத்தில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அட்டகாசம் நெற்பயிர்கள் சேதம்

கே.வி.குப்பம், ஆக.8: கே.வி.குப்பம் அருகே தொடர்ந்து 2 நாட்களாக விவசாய நிலத்தில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் நெற்பயிர்கள் சேதம் அடைந்தது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகாவில் உள்ள வனப்பகுதியில் இருந்து அவ்வபோது காட்டுயானைகள் வந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாகும். நேற்று முன்தினம் காளாம்பட்டு, பனமடங்கி ஆகிய ஊராட்சிகளில் வனப்பகுதியை ஒட்டி உள்ள விளை நிலங்களில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சென்று அங்குள்ள நெற்பயிர்களை சேதப்படுத்தியது.

அதே பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் சத்தியன் என்பவருக்கு சொந்தமான நெற் பயிர்களை காட்டுயானைகள் மிதித்து நாசம் செய்துள்ளன. அச்சமடைந்த அங்கிருந்த விவசாயிகள் காட்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதேபோல் நேற்று மேல்மாயில் ஊராட்சி மயிலாடுமலை பகுதியிலும் காட்டு யானைகள் வந்துள்ளன.

இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி வனச்சரக அலுவலர் கந்தசாமி தலைமையிலான வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வனத்துறையினர் முகாமிட்டு யானைகள் நடமாட்டத்தை ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல் மாளிப்பட்டு காளம்பட்டு, பள்ளத்தூர் பகுதிகளிலும் யானைகள் அவ்வப்போது வந்து போவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு மேலாக யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வரும் நிலையில் நேற்று அதிகாலை முதல் சுழற்சி முறையில் வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஊருக்குள் வந்து அச்சுறுத்தி வருவதால் விவசாயிகள் தங்களுடைய நிலங்களுக்கு நீர் பாய்ச்ச செல்வதற்கும், இரவு நேரங்களில் வெளியில் வருவதற்கும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.