வேலூர், ஆக.8: வேலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றவாளிகள் 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சைபர் கிரைம் (இணையவழிக் குற்றங்கள்) என்பது கணினி, கைப்பேசி அல்லது இணையத்தை பயன்படுத்திச் செய்யப்படும் குற்றச் செயல்களாகும். இந்தியாவை பொறுத்தவரை வங்கி ஊழியர் போல பேசி ஓடிபி, பின் எண்களை பெற்று பணத்தைத் திருடுதல், யூடியூப் வீடியோவை லைக் செய்தால் பணம்’ என ஆசை காட்டி,
முதலீடு செய்ய வைத்து பணத்தை ஏமாற்றுவது, கிரிப்டோ கரன்சி மற்றும் பங்குச்சந்தை மோசடி வகையில், அதிக லாபம் தருவதாகக் கூறி போலி முதலீட்டுச் செயலிகள் மூலம் பணத்தைப் பறிப்பது, சிபிஐ, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அல்லது காவல் துறை போலப் பேசி டிஜிட்டல் கைது செய்யப்பட்டிருப்பதாக மிரட்டி பணத்தை பறிப்பது போன்ற குற்றங்கள் நடைபெறுகின்றன.
மேலும் போலி இணையதள லிங்குகளை அனுப்பி, கணக்கு விவரங்கள் அல்லது கடவுச்சொற்களைத் திருடுதல், சமூக வலைத்தளக் கணக்குகள் அல்லது மின்னஞ்சலைத் தன்வசப்படுத்தி தவறாகப் பயன்படுத்துவது, ஆபாச வீடியோ அழைப்புகள் மூலம் வீடியோ பதிவு செய்து, அதை வைத்து மிரட்டிப் பணம் கேட்பது அல்லது பெண்களை இணைய வழியில் தொடர் கண்காணிப்பு செய்து தொந்தரவு தருவது என பல்வேறு வழிகளில் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகின்றன.
இதுதொடர்பாக சைபர் கிரைம் பிரிவில் ஆயிரக்கணக்கில் புகார்கள் வந்து குவிந்து வருகின்றன. பெரும்பாலும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தே இந்த குற்றங்களில் சமூக விரோதிகள் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தொடங்கி இரண்டு நாட்களுக்கு வேலூர் மாவட்டம் முழுவதும் நடந்த சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட்டவர்களை கண்காணித்து பிடித்து அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கும் நடவடிக்கையில் சைபர் கிரைம் போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசாருடன் இணைந்து இறங்கியுள்ளனர். இதில் வேலூர் சப் டிவிஷனில் மட்டும் 5க்கும் மேற்பட்டவர்கள் பிடிப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



