Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுக, அதிமுக உள்ளிட்ட 116 பேர் வேட்பு மனுத்தாக்கல் இன்று மனு பரிசீலனை வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில்

வேலூர், ஏப்.7: வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட 116 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. அதையொட்டி, வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் நடந்த 3 நாட்களில், வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்கியது.

இதில், காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன், அதிமுக வேட்பாளர் ராமு ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அதேபோல், அணைக்கட்டு தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் மனு தாக்கல் செய்தார். வேலூர் ெதாகுதியில் திமுக வேட்பாளர் ப.கார்த்திகேயன், குடியாத்தம்(தனி) தேமுதிக வேட்பாளர் பிரதாப், அதிமுக வேட்பாளர் பரிதா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். காட்பாடி, வேலூர் சட்டமன்ற தொகுதியில் 3 மணிக்கு முன்பாக வந்த வேட்பாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று மட்டும் வேலூர் சட்டமன்ற தொகுதியில் 14 பேரும், காட்பாடி தொகுதியில் 13 பேரும், அணைக்கட்டு 10 பேரும், கே.வி.குப்பம் தொகுதியில் 13 பேரும், குடியாத்தம் தொகுதியில் பேர் என மொத்தம் 10 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதியில் நேற்று ஒரே நாளில் 60 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்றுடன் நிறைவடைந்த வேட்பு மனு தாக்கலில் 91 ஆண்கள், 25 பெண்கன் என மொத்தம் 116 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தொடர்ந்து, இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். இன்று மாலை 5 மணியளவில் ஏற்கப்பட்ட மனுக்கள் மற்றும் தள்ளுபடி மனுக்களின் விபரம் வெளியாகும். வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 9ம் தேதியாகும். அன்று மாலை 3 மணியளவில், சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.