Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் புதிய திருக்கோயில்களை கொண்டுவர புதிய நடைமுறை சரிபார்ப்பு படிவம் கட்டாயம்

வேலூர், செப்.5: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் புதிய திருக்கோயில்களை கொண்டு வருவதற்காக தாக்கல் செய்யப்படும் அறிக்கைகளுடன் சிறப்பு சரிபார்ப்பு படிவத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. புதிய திருக்கோயில்களை இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் கொண்டுவருவதற்கு தாக்கல் செய்யப்படும் அறிக்கைகளுடன், பூர்த்தி செய்யப்பட்ட சிறப்பு ‘சரிபார்ப்பு படிவத்தை’ இணைத்து அனுப்ப வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

புதிய திருக்கோயில்களைத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அனுமதி கேட்டு உதவி ஆணையர்களிடமிருந்து பெறப்படும் அறிக்கைகளில் முழுமையான விவரங்கள் இடம் பெறுவதில்லை. இதனால், விடுபட்ட தகவல்களை கோரி தனியாகக் கடிதம் அனுப்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அத்துடன் கோப்புகளும் நிலுவையில் தேங்கி நிற்கிறது.

இதனை கருத்தில் கொண்டு, கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெற்ற ஆணையரின் சீராய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டாயமாக்கப்பட்டுள்ள சரிபார்ப்புப் படிவத்தை சமர்ப்பிக்கும் உதவி ஆணையர்கள், தங்களின் அறிக்கையுடன் இணைக்க வேண்டிய சரிபார்ப்புப் பட்டியலில் திருக்கோயிலின் முழு முகவரி, அமைவிடத்தின் புகைப்படம் மற்றும் நில அமைவிட விவரங்கள்.

திருக்கோயிலுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துகளின் தனித்தனி வருமான விவரங்கள், அ.பதிவேடு நகல், சிட்டா, அடங்கல், புல வரைபடம் மற்றும் கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ் ஆகியவற்றுடன், பெறப்பட்ட புகார் கடிதங்களின் தன்மை, தற்கால நிர்வாகி மற்றும் பூசாரியின் வாக்குமூலங்களையும் இணைக்க வேண்டும்.

மேலும், நிர்வாகிக்கு அனுப்பப்பட்ட காரணம் கேட்கும் அறிவிப்பு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்பு மற்றும் பெறப்பட்ட ஆட்சேபனை விவரங்கள், நீதிமன்ற வழக்கு விவரங்கள், அறக்கட்டளை ஆவணங்கள், தடையின்மை சான்றிதழ் மற்றும் பொதுமக்கள் சட்டப்படி வழிபடும் உரிமையை கொண்ட பொதுக்கோயிலுக்கான காரணிகள் பூர்த்தியாகின்றனவா போன்ற விவரங்களையும் இணைக்க வேண்டும்.

ஆகவே இனி வரும் காலங்களில், ஆய்வர் மற்றும் உதவி ஆணையரின் பரிந்துரைகளுடன், மேற்கண்ட முழுமையான அறிக்கைகளை மட்டுமே அனுப்ப வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் (கல்வி) சிவகுமார் உதவி ஆணையர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.