கே.வி.குப்பம்,செப்.5: குடியாத்தம் அருகே மனைவியை கொடுமைப்படுத்திய கணவனை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரவக்கல் ஊராட்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (39), கூலித்தொழிலாளி. இவருக்கு மாலதி(35) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் தமிழரசனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் தமிழரசன் அடிக்கடி மது போதையில் மனைவியை அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் மனைவி மாலதியை மது போதையில் அடித்து கொடுமை படுத்தியுள்ளார். இதனால் வேதனையடைந்த மாலதி நேற்று குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிந்து தமிழரசனை நேற்று கைது செய்து விசாரித்து வருகிறார்.


