Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

வேலூர் சத்துவாச்சாரியில் டாக்டர் வீட்டில் 45 சவரன் நகை, பணம் திருட்டு; வழக்கில் 2 தனிப்படைகள் அமைப்பு: சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு

வேலூர், ஆக.5: வேலூர் சத்துவாச்சாரியில் அரசு டாக்டர் வீட்டில் 45 சவரன் நகைகள், ரூ.1.60 லட்சம் திருட்டு வழக்கில் 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். வேலூர் சத்துவாச்சாரி அடுத்த ஏரியூரை சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மனைவி அம்பிகா(70). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகன் பெங்களூருவில் தங்கி சேல்ஸ்மேனாகவும், மற்றொரு மகனான புருஷோத்தமன் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டராகவும் வேலை செய்து வருகின்றனர். முனிரத்தினம் இறந்துவிட்டதால், அம்பிகா மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

அம்பிகா கடந்த 1ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு செங்கல்பட்டில் உள்ள மகன் வீட்டிற்கு சென்ற நிலையில், பூட்டை உடைத்து நேற்று முன்தினம் வீட்டின் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 45 சவரன் நகை, ரூ.1.60 லட்சம் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் துணிகர திருட்டு தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

அதேநேரத்தில் சம்பவம் நடந்த வீட்டின் அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும், ஏரியூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் சேகரித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘அநேகமாக இது உள்ளூர் குற்றவாளிகளாகவே இருக்க வாய்ப்புள்ளதால், அதை நோக்கிய எங்கள் விசாரணை நடந்து வருகிறது’ என்றனர்.