Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த 242 காளைகள் 13 பேர் காயம் சீலேரி கிராமத்தில் மாடு விடும் விழா

அணைக்கட்டு, பிப். 5: அணைக்கட்டு தாலுகா கெங்கநல்லூர் ஊராட்சி சீலேரி கிராமத்தில் பொன்னியம்மன் தை உற்சவ திருவிழாவை முன்னிட்டு காளை விடும் திருவிழா நேற்று நடந்தது. தாசில்தார் சுகுமார் தலைமையில் மண்டல துணை தாசில்தார் ரமேஷ், ஊர் தர்மகர்த்தா சீனிவாசன், கிராம மேட்டுக்குடி ராஜசேகர், வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரி, விஏஓ சங்கர்தயாளன் மற்றும் கிராம விழா குழுவினர், போலீசார் விழா உறுதிமொழி ஏற்று விழாவை தொடங்கி வைத்தனர். நிர்வாகிகள் டில்லிபாபு, ஹரிவராசன், யுவராஜ், பாலாஜி, ராஜ்குமார், சர்க்கரை முன்னிலை வகித்தனர். காலை 9மணிக்கு தொடங்கிய விழாவில் பல்வேறு ஊர்களில் இருந்து 250 காளைகள் பங்கேற்றது. கால்நடை மருத்துவ குழுவினரின் பரிசோதனையில் 8 மாடுகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 242 மாடுகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக வீதியில் அவிழ்த்து விடப்பட்டது. புழுதி பறக்க தெருவில் நின்றிருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், இளைஞர்கள் மத்தியில் காளைகள் ஒவ்வொன்றாக இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடியது.

அங்கு குவிந்திருந்த காளையர்கள், மாடுகளை உற்சாகத்துடன் விரட்டினர். பிரபலமான மாடு தெருவில் சீறிப்பாய்ந்து ஓடும் போது அந்த மாட்டின் மீது கை போட்டு இளைஞர்கள் ஆரவாரம் செய்தனர். பகல் 2.15 மணிக்கு விழா முடிக்கப்பட்டது. விழாவில் கொடியசைக்கும் தூரத்தை 8.90 என்ற குறைந்த வினாடிகளில் ஓடி முதலிடம் பிடித்த கம்பன் எக்ஸ்பிரஸ் மாட்டிற்கு முதல் பரிசாக ரூ.75000 வழங்கப்பட்டது‌. 8.92 வினாடிகளில் ஓடி இரண்டாம் இடம் பிடித்த வேலம்பட்டு மாட்டிற்கு ரூ.60000, அடுத்தபடியாக 8.98 வினாடிகளில் ஓடி 3ம் இடம் பிடித்த மாட்டிற்கு ரூ.50000 உட்பட மொத்தம் 51 பரிசுகள் மாட்டின் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது. விழாவில் மாடு முட்டியது உட்பட 13 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு முகாமிட்டிருந்த மருத்துவ அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான நடமாடும் மருத்துவ குழுவினர் சிகிச்சைகள் அளித்தனர். அதில் படுகாயம் அடைந்த 3 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விழாவையொட்டி ஏடிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் அணைக்கட்டு டிஎஸ்பி சாரதி உட்பட 2 டிஎஸ்பிகள் அணைக்கட்டு போலீசார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.