Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேலூரில் முதல்முறையாக 100 டிகிரி வெயில் பதிவு மார்ச் மாதமே அனல் பறக்கும் வெப்பம் கோடையில் இந்தாண்டு

வேலூர், மார்ச் 4: வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு முதல்முறையாக 100 டிகிரி வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். கோடைக்காலங்களில் ஏப்ரல், மே மாதங்களில் வேலூர் மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். மே மாதத்தில் கத்திரி என்கின்ற அக்னி நட்சத்திரம் இருக்கும் காலக்கட்டத்தில் 110 டிகிரி வரை வெயில் கொளுத்தும். இந்நிலையில் இந்தாண்டு வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருமழை போதுமான அளவு பெய்யவில்லை. இதனால் ஏரிகள், குளங்கள் எல்லாம் வறண்டு வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலே 3 மாதங்களுக்கு மேலாக சரியாக மழை பெய்யவில்லை. இதற்கிடையில் இந்தாண்டு பிப்ரவரி மாதம் இறுதியில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. வேலூர் மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 99 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில் நேற்று இந்தாண்டின் முதல் முறையாக வேலூரில் 100.2 டிகிரி வெயில் பதிவானது.

இதனால் பொதுமக்கள் அனல் காற்றால் அவதிக்குள்ளாகினர். மார்ச் மாதம் தொடக்கமே 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி உள்ளதால் வரும் நாட்களில் மேலும் வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இப்போதே வெயிலை எப்படி சமாளிப்பது என்று பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.