Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மின்சாரத்தில் இயங்கும் ரயில்வே கேட் அமைக்கும் பணி தீவிரம் அதிகாரிகள் தகவல் காட்பாடி, சேவூர், திருவலம் பகுதிகளில்

வேலூர், பிப்.4: காட்பாடி, சேவூர், திருவலம் பகுதிகளில் மின்சாரத்தில் இயங்கும் ரயில்வே கேட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காட்பாடி ரயில்வே நிலையம், சென்னை-பெங்களூரு மற்றும் திருப்பதி வழித்தடங்களில் உள்ள மிக முக்கியமான ரயில் நிலையமாக உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் வழியாக தினமும் 200க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்லும், தென்னக ரயில்வேயின் முக்கிய சந்திப்பாக உள்ளது. தற்போது, ரயில் நிலையம் மற்றும் ரயில்வே கேட் பகுதிகளை மாற்றி அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, தற்போது பயன்பாட்டில் உள்ள ரயில்வே கேட் ஆட்களை கொண்டு இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, ரயில்வே கேட்டை மின்சாரத்தின் உதவியோடு இயக்கும் வகையில் மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, காட்பாடி மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் வழியில் உள்ள ரயில்வே கேட் இவ்வழியாக ரயில்கள் வரும் போது, ‘சிக்னல்' கொடுக்கப்பட்டு, ரயில்வே கேட் ஆட்களை கொண்டு இயக்கப்படுகிறது.

ரயில்கள் கடக்கும் வரை, ‘கேட்’ மூடபட்டிருக்கும். ரயில் கடந்த பின், 'சிக்னல்' கிடைத்ததும், ரயில்வே கேட் சாவி போட்டு திறக்கப்பட்டு, தடுப்பு உயர்த்தப்படும். இதற்கு மாற்றாக, ரயில்வே லெவல் கிராசிங்களில் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. அதில், மின்சாரத்தால் இயக்கும் கேட் திட்டத்தை செயல்படுத்த துவங்கியுள்ளது. காட்பாடி, சேவூர், திருவலம் ஆகிய பகுதிகளில் ரயில்வே கேட், மின்சாரத்தினால் இயங்கும் வகையில் மாற்றுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தற்போது பயன்பாட்டில் உள்ள ரயில்வே கேட் ஏற்றி, இறக்கும் போது, கேட் கீப்பர்களுக்கு உடல் அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. மேலும், அடிக்கடி பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி, ரயில்கள் கடந்து சென்ற பின், ரயில்வே கேட் மேனுவலாக மேலே ஏற்றும் வரை, 5 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இதற்கு மாற்றாக, மின்சாரத்தால் இயக்கப்படும் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இதில், மின் ஏற்றம் பூட்டு கண்டறிதல் போன்ற அம்சங்கள் உள்ளன.

பட்டனை அழுத்தினால், ஒரே நேரத்தில் இரண்டு கேட்களும் இறங்குகின்றன. ரயில் வரும் போது, கேட்டில் சிவப்பு ஒளியும் பிரதிபலிக்கிறது. 'மேனுவலாக' செய்வது தேவைப்படும் வினாடிகளை விட, மின்சார ரயில்வே கேட் ஏற்றி, இறக்க குறைந்த வினாடிகளே எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்க முடியும். காட்பாடி, சேவூர், திருவலம் ரயில்வே கேட்கள் மின்சாரத்தில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், சாலை போக்குவரத்தில், பரபரப்பான கிராசிங்களுக்கு முன்னுரிமை அளித்து, மின்சாரத்தில் இயங்கும் ரயில்வே கேட் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.