Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிளஸ்2 பொதுத்தேர்வை 15,485 மாணவர்கள் எழுதினர் கலெக்டர் நேரில் ஆய்வு : 177 மாணவர்கள் ஆப்சென்ட் வேலூர் மாவட்டத்தில் 82 மையங்களில் நேற்று தொடங்கிய

வேலூர், மார்ச் 3: வேலூர் மாவட்டத்தில் 82 மையங்களில் நேற்று தொடங்கிய பிளஸ்2 பொதுத்தேர்வை 15 மையங்களில் 15,485 மாணவர்கள் எழுதினர். இத்தேர்வை கலெக்டர் சுப்புலட்சுமி நேரில் ஆய்வு செய்தார். மொழி பாட தேர்வில் 177 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். தமிழகத்தில் இந்தாண்டு பிளஸ்2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வை 142 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 134 மாணவர்கள், 8 ஆயிரத்து 522 மாணவிகள் என்று மொத்தம் 15 ஆயிரத்து 668 பேர் விண்ணப்பித்தனர். இதற்காக வேலூர் மாவட்டத்தில் 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 82 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 82 துறை அலுவலர்களும், 6 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களும், 20 வழித்தட அலுவலர்களும் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணிக்காக 102 பறக்கும்படை உறுப்பினர்கள் என சுமார் 1,127 ஆசிரியர்கள் அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் சுமார் 227 சொல்வதை எழுதுபவர்களாக தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி முதல் நாளான நேற்று மொழிப்பாடத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. இவர்களுக்கு தேவையான வினாத்தாள்கள், மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து 20 வழித்தடங்கள் மூலமாக தேர்வு மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை அனுப்பி வைக்கப்பட்டது. தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவிகள் மற்றும் தனிதேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்தடைந்தனர். தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் தேர்வு மைய, கண்காணிப்பாளரிடம் ஹால் டிக்கெட் காண்பித்த பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களையும் தேர்வு மையம் மற்றும் தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக நேற்று தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு முன்பாக மாணவர்கள் வழியில் உள்ள கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர். பிளஸ்2 வகுப்பு மொழி பாடப்பிரிவில் 15,485 மாணவர்கள் தேர்வு எழுதினர். 6 பேருக்கு மொழி பாட தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டது. 177 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. அதேபோல், தனித்தேர்வர்கள் 384 பேரில், 351 பேர் தேர்வு எழுதினர். 33 பேர் ஆப்சென்ட் ஆகினர். வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடந்த பிளஸ்2 பொதுத்தேர்வை கலெக்டர் சுப்புலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.