குடியாத்தம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மளிகை கடைக்காரருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை: வேலூர் போக்சோ கோர்ட் உத்தரவு
வேலூர், அக்.2: குடியாத்தம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மளிகை கடைக்காரருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா வளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (58). மளிகைக் கடை நடத்தி வந்தார். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி 10ம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கு கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிறுமியை அவரது பெற்றோர் குடியாத்தம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மேல்பட்டி போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி மோனிகா விசாரணை செய்தார். வழக்கு நடைபெற்ற காலத்தில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. அதில் கஜேந்திரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


