பள்ளிகொண்டா அருகே வீட்டை விட்டு வெளியேறி தாய் மாமனை; திருமணம் செய்த சிறுமி மீட்பு; குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைப்பபு
பள்ளிகொண்டா, அக்.28: பள்ளிகொண்டா அருகே வீட்டை விட்டு வெளியேறி தாய் மாமனை திருமணம் செய்த சிறுமியை அதிகாரிகள் மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பிராமணமங்கலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி. 9ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவரான அவரது தாய்மாமன் விநாயகம்(27) என்பவரை ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 16ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பள்ளிகுப்பம் அருகேயுள்ள பூமலை முருகர் கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் தேடி வந்தனர். மேலும், வேலூரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு போலீசார் கொடுத்த தகவலின் பேரில் அணைக்கட்டு வட்டார விரிவாக்க அலுவலர் கீதா பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்கு சென்று இதுகுறித்து புகார் அளித்தார். அதனையடுத்து நேற்று சொந்த ஊர் திரும்பிய காதல் ஜோடியை போலீசார் காவல் நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் இருவரும் குடும்பத்திற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதனையடுத்து விநாயகம் மீது பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியை மீட்டு காட்பாடி வள்ளி மலைக்குச் செல்லும் கூட்ரோட்டில் இயங்கிவரும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.


