வேலூர், அக்.28: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, வேலூர் போக்சோ கோர்ட் தீர்ப்பளித்தது. வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர்(63). இவர் வீட்டின் அருகே உள்ள 5 வயது சிறுமி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி, பாஸ்கர் வீட்டிற்கு விளையாட சென்றுள்ளது. அப்போது, முதியவர் பாஸ்கர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர், வீட்டில் இருந்து அழுதபடியே வெளியே வந்தது.
அதைக்கண்ட சிறுமியின் பாட்டி, ‘ஏன் அழுகிறாய்?’ எனக் கேட்டுள்ளார். அதற்கு, முதியவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதை சிறுமி கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாஸ்கரை கைது செய்தனர். இந்த வழக்கு வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி மோனிகா விசாரித்தார். வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கர் மீது சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, பாஸ்கரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


