வேலூரில் செல்போனில் மூழ்கிய மனைவியை கண்டித்ததால் தந்தையை கல்லால் தாக்கி கொல்ல முயன்ற மகன்: கைது செய்து போலீசார் விசாரணை
வேலூர், செப்.7: வேலூரில் மனைவி செல்போனில் மூழ்கியதை கண்டித்ததால், தந்தையை கல்லால் தாக்கிய கொல்ல முயன்ற மகனை போலீசார் கைது செய்தனர். வேலூர் அடுத்த அரியூர் ஜீவரத்தினம் நகரை சேர்ந்தவர் அகஸ்டின்(80), ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர். இவரது மகன் செபாஸ்டின்(35), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அம்மு. தம்பதியருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக செல்போனில் மூழ்கிய மருமகள் அம்முவை அகஸ்டின் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், கோபித்துக்கொண்ட அம்மு குடியாத்தத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த செபாஸ்டின், வீட்டில் இருந்த அகஸ்டினிடம் எனது மனைவியை எதற்காக திட்டினாய்? என கேட்டுள்ளார். இதனால் தந்தை, மகன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த செபாஸ்டின், அங்கிருந்த கல்லை எடுத்து தந்தை அகஸ்டின் மீது வீசியுள்ளார். இதில் படுகாயமடைந்த அகஸ்டின் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் அரியூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து செபாஸ்டினை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மனைவியை கண்டித்ததால், தந்தை மீது கல்லை போட்டு மகன் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


