Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தண்டவாளம் அருகே பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை; விழிப்புணர்வு ஏற்படுத்த ரயில்வே போலீசாருக்கு உத்தரவு..!

வேலூர், நவ.3: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தண்டவாளத்தை ஒட்டிய இடங்களில் பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை கிராமமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ரயில்வே போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ளது. நகர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களின் சொந்த கிராமங்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகையொட்டி ரயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் விழிப்புணர்வு ஏற்படுத்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப் பற்றும் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்பதை பயணிகளிடம் விழிப்புணர்வாக ஏற்படுத்த முன்னெடுப்புகளை ரயில்வே பாது காப்பு படை போலீசார் எடுத்துள்ளனர். இதற்கு ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனிலும் பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தற்போது, ரயில்வே தண்டவாளத்தை ஒட்டிய இடங்களில் பட்டாசு, பெரிய அளவிலான வெடி போன்றவற்றை வெடிப்பதை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் அனைத்து ரயில்வே கோட்டங்களிலும், தண்டவாளத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் தண்டவாள பகுதியில் பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிவுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

தெற்கு ரயில்வேயை பொறுத்தளவில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்களிலும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இவ்விழிப்புணர்வு பணியை மேற்கொள்கின்றனர். நகரத்தை ஒட்டியிருக்கும் பகுதியிலும், கிராமங்களை ஒட்டி தண்டவாளம் செல்லும் இடங்களிலும் வசிக்கும் மக்களிடம் பட்டாசு வெடிக்கும் முறை பற்றி எடுத்துரைக்க உள்ளனர். யாரும் எக்காரணம் கொண்டும் தண்டவாள பகுதிக்கு வந்து பட்டாசு வெடிப்பது கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த அறிவுறத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கூறியதாவது:

தீபாவளியொட்டி ரயில்களில் பாதுகாப்பு பணியை அதிகரித்துள்ளோம். அதில் ரயில்களில் பட்டாசு எடுத்து செல்வதை தடுக்க ரோந்து மேற்கொள்ளப்படுகிறது. யாரேனும் பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீ பற்றும் பொருட்களை எடுத்து வந்தால், அதிகபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் தண்டவாளத்தை ஒட்டியுள்ள கிராமங்கள் மற்றும் இதர குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று மக்களிடம் தண்டவாள பகுதிக்கு வந்து பட்டாசு வெடிக்கக்கூடாது. அதன் அருகில் உள்ள இடங்களிலும் வெடி வைக்கக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

ஒருசில நாட்களில் இந்த விழிப்புணர்வை தீவிரமாக மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தண்டவாள ரோந்து பணியில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் ஈடுபடுவார்கள். இதற்காக ஒவ்வொரு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். அவர்கள் பொதுமக்கள் ரயில்வே தண்டவாள பகுதியில் பட்டாசு வெடிக்கக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.