Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தொழிலாளிக்கு ரூ.29 கோடி ஜிஎஸ்டி வரி நோட்டீஸ்; வங்கி கணக்கு முடக்கம்; வாணியம்பாடி அருகே பரபரப்பு!!

வாணியம்பாடி, அக். 28: வாணியம்பாடி அருகே தொழிலாளிக்கு ரூ.29 கோடிக்கும் அதிகமாக ஜிஎஸ்டி வரி மற்றும் அபராதம் செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பி அவரது வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ஷாகிராபாத் பகுதியைச் சேர்ந்தவர் இக்பால் முஜம்மில்(45). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள், ஒரு மகன் மற்றும் மனைவியுடன் அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி- 1 வணிக வரி உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து நேற்று இக்பால் முஜம்மிலுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், இக்பால் டிரேடர்ஸ் என்ற வணிக நிறுவன பெயரில் இக்பால் முஜம்மிலின் பான் மற்றும் ஆதார் எண்களைப் பயன்படுத்தி கடந்த 2022-23 நிதி ஆண்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வணிக பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2022-23ம் நிதியாண்டில் வணிகவரித்துறைக்கு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் வரி முறைகேடுகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வணிகவரி துறைக்கு செலுத்த வேண்டிய வரித் தொகை, வட்டி மற்றும் தாமதக் கட்டணம் மற்றும் அபராதம் என மொத்தம் ரூ.29 கோடியே ரூ.24 லட்சத்து ரூ.63 ஆயிரத்து 902 உடனடியாக செலுத்த வேண்டும் அல்லது உரிய விளக்கம் அளிக்க வேண்டும், என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி நோட்டீஸ் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கூலித்தொழிலாளி இக்பால் முஜம்மில் தன்னுடைய ஆதார் மற்றும் பான் நம்பர்களை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட சட்டவிரோத நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எனக்கும் இந்த ஜிஎஸ்டி மோசடிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை எனவும் புகார் மனு அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து வணிகவரித்துறை சார்பில் இருந்து இக்பால் முஜம்மில்லை அவரது பான் மற்றும் ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், ரேஷன் கார்டு, வருமானச் சான்றிதழ் மற்றும் காவல் துறை புகார் நகல் ஆகிய அசல் ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உதவி ஆணையர் அலுவலகம் சம்மன் அனுப்பி உள்ளது. இந்த சம்பவம் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.