(திருப்பத்தூர்) சுகாதாரத்துறை அலுவலக கண்காணிப்பாளர் மீது வழக்கு; கூகுள் பே மூலம் ரூ.1 லட்சம் லஞ்சம்..!
திருப்பத்தூர், அக். 28: கூகுள் பே மூலம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய சுகாதாரத்துறை அலுவலக கண்காணிப்பாளர் மீது நேற்று வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் அருகே மாவட்ட சுகாதார அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 23ம் தேதி திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜன் தலைமையில் காவல் ஆய்வாளர் கவுரி, உதவி ஆய்வாளர் கணேசன் உள்ளிட்ட போலீசார் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மாலை 3 மணி முதல் இரவு 8.45 மணி வரை நடைபெற்ற இந்தச் சோதனையின்போது, அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் ரஜினி என்பவர், சென்னையை சேர்ந்த மருந்துக் கொள்முதல் ஒப்பந்ததாரர்களிடமிருந்து கூகுள் பே வாயிலாக ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாகக் கண்காணிப்பாளர் ரஜினி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூகுள் பே மூலம் பணம் பெற்ற கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


