கலவை: திமிரி பேரூராட்சியில் அதிகரித்துள்ள குரங்குகள் நடமாட்டத்தால் குழந்தைகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இவை தெருக்கள் மற்றும் வீடுகளின் அருகே சுற்றித் திரிவது மட்டுமின்றி வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வது, வாடிக்கையாகி விட்டதாக குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் கைகளில் இருக்கும் பைகளுக்காக அருகில் வருவதால் அசம்பாவிதங்கள் ஏற்படுமோ என்ற அச்சமும் நிலவுவதகா பெற்றோர்கள் கூறுகின்றனர். எனவே, வனத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் குறங்குகளை வனப்பகுதிக்கு அனுப்புமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


