சோளிங்கர், அக்.28: சோளிங்கர் அருகே கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர் வீட்டில் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை சேர்ந்தவர் முரளி. இவர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி குளக்கரை பகுதியில் வீடு கட்டி வசித்து வருகிறார். கேட்டரிங் தொழிலும் நடத்தி வருகிறார். கடந்த ஒரு வாரமாக பில்லாஞ்சியில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு செய்யாறில் உள்ள வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று தங்கியுள்ளார்.
இந்நிலையில் பில்லாஞ்சியில் உள்ள அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். அதன்பேரில் முரளி பில்லாஞ்சிக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு, படுக்கை அறை, பீரோவின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 3 சவரன் நகைகள், வெள்ளி கால்கொலுசு, வெள்ளிக்காசுகள் மற்றும் ரூ.1000 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முரளி சோளிங்கர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகை ஆதாரங்களை பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


