ஆற்காடு,அக்.28: ஆற்காட்டில் பஸ்சுக்காக நடந்து சென்ற பெண்ணிடம் 5 சவரன் தாலி செயின் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை கீழாண்ட தெருவை சேர்ந்தவர் அமுல் (46). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று கடைக்கு தேவையான பொருட்களை வாங்க ஆற்காடு மார்க்கெட்டிற்கு தனது கணவர் சொக்கலிங்கத்துடன் வந்துள்ளார். பின்னர் பொருட்களை வாங்கி தனது கணவரிடம் கொடுத்துவிட்டு ஊருக்கு செல்வதற்காக மார்க்கெட்டில் இருந்து பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் அவர் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அமுல், இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது ராணிப்பேட்டை காரை நேரு நகரை சேர்ந்த ரமேஷ் (35) என்பது தெரியவந்தது. இதனையடுத்து ரமேஷை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து ஆற்காடு கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


