Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இனிப்பு, காரம் தயாரித்து விற்க உரிமம் பெறுவது கட்டாயம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல் தீபாவளி பண்டிகையையொட்டி

வேலூர், அக்.30: தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, காரம் தயாரித்து விற்பனை செய்பவர்கள் உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகை வரும் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியையொட்டி பொதுமக்கள் இனிப்பு வகைகளை அதிகம் வாங்கி உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு கொடுத்து மகிழ்வர். உணவு பண்டங்கள் தயாரிப்பது தீபாவளி பண்டிகையில் முக்கிய அம்சமாகும். தீபாவளி பண்டிகை காலங்களில், தற்காலிக உணவுகூடங்கள், திருமண மண்டபங்கள், வீடுகள் மற்றும் சீட்டு நடத்துபவர்கள் ஆர்டரின் பேரில் இனிப்பு மற்றும் கார வகைகள் அதிகம் தயாரித்து விற்பனை செய்வர். இவர்கள் அனைவரும் உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என்று உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை கூறியாவது:

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், தரமான கலப்படமில்லாத மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். முதலில் வாங்கிய மூலப்பொருட்கள் முதலிலும் அடுத்தடுத்த வரும் மூலப்பொருட்கள் அடுத்தடுத்தும் பயன்படுத்தும் முறையை பின்பற்றி அதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான கலர்களை உபயோகிக்ககூடாது. தரமான நெய் மற்றும் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தக்கூடாது. பண்டிகை கால இனிப்பு வகைகளை பரிசு பேக்கிங் செய்யும்போது, பால் பொருட்களால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை மற்ற இனிப்பு பொருட்களுடன் பேக்கிங் செய்து விற்பனை செய்யக் கூடாது.

சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தூய்மையாக இருக்க வேண்டும். நீரின் தரத்தினை அறியும் பொருட்டு பகுப்பாய்வு சான்றிதழ் பெற்று வைத்திருக்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் சில்லறை இனிப்பு பொருட்களுக்கும், விவரச் சீட்டு கட்டாயம் இருக்க வேண்டும். அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் எண், பேட்ஜ் எண் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது. உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். உணவு தயாரிக்கும் பணியாளர் தூய்மையான ஆடைகளை அணிந்து, நகங்களை வெட்டி சுத்தமாக இருக்க வேண்டும். மேலும், பணியாளர்கள் தலைகவசம், மேலங்கி மற்றும் கையுறை அணிய வேண்டும். பணிகளை தொடரும் முன்பும், கழிவறை பயன்டுத்திய பின்பும் சோப்பு கொண்டு கைகளை சுத்தம் செய்தல் வேண்டும்.

பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களும் உடனடியாக https:// https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, இந்திய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்று கொள்ள வேண்டும். பொதுமக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.