வேலூர், அக்.30: காட்பாடியில் திமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார், தொழில் அதிபர் சேகர் ரெட்டி வீடுகளில் விஜிலென்ஸ் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதையறிந்த திமுக தொண்டர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு மீது பணி நியமனங்களில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் நேற்று காலை கே.என்.நேரு வீடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் விஜிலென்ஸ் போலீசார் ரெய்டில் ஈடுபட்டனர். அதேபோல், வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் வீடு உள்ளது.
நேற்று காலை 8.30 மணியளவில் நந்தகுமார் வீட்டில் வேலூர் மாவட்ட விஜிலென்ஸ் டிஎஸ்பி ராஜு தலைமையில் இன்ஸ்பெக்டர் மைதிலி உட்பட 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கி தொடர்பான ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். மேலும் பால்கனி மொட்டை மாடி மற்றும் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி ஆகியவற்றிலும் தீவிர சோதனை நடத்தினர்.
தொடர்ந்து ஆவணங்களை நகல் எடுப்பதற்காக ஜெராக்ஸ் இயந்திரத்தை விஜிலென்ஸ் போலீசார் வீட்டிற்கு கொண்டு வந்தனர். இதற்கிடையில் விஜிலென்ஸ் போலீசார் சோதனையை தொடர்ந்து அவரது வீட்டின் முன்பு திமுக தொண்டர்கள் திரளாக குவிந்தனர். அப்போது இது காழ்ப்புணர்ச்சி காரணமாக தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என கண்டனம் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விருதம்பட்டு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனை மாலை 6 மணியை கடந்தும் தொடர்ந்து நடந்து வந்தது.
இதேபோல் காட்பாடி காந்தி நகரில் உள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் ராணிப்பேட்டை மாவட்ட விஜிலென்ஸ் டிஎஸ்பி கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் 6 பேர் கொண்ட குழுவினர் காலை 8.30 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை காலை 10.50 மணியளவில் நிறைவடைந்து. இதையடுத்து அங்கிருந்து போலீசார் புறப்பட்டு சென்றனர். காட்பாடியில் அடுத்தடுத்த சோதனை சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்பாடி காந்திநகரில் உள்ள முன்னாள் எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் வீட்டில் விஜிலென்ஸ் போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். காட்பாடி காந்திநகரில் தொழில் அதிபர் சேகர்ரெட்டி வீட்டில் சோதனை முடித்துவிட்டு வெளியே வந்த விஜிலென்ஸ் போலீசார்.


