Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கே.வி.குப்பம் அருகே ரத்த கறை பையுடன் வந்து சுடுகாட்டில் மாந்திரீக பூஜை செய்த இளம்பெண்: குழந்தையை நரபலி கொடுத்ததாக பரபரப்பு

கே.வி.குப்பம், ஜூலை 30: கே.வி.குப்பம் அருகே சுடுகாட்டில் ரத்தக்கறை பையுடன் வந்து இளம்பெண் மாந்திரீக பூஜை செய்தார். அவர் குழந்தையை நரபலி கொடுத்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் - விரிஞ்சிபுரம் சாலையில் முடினாம்பட்டு சுடுகாட்டு பகுதியில் நேற்று மாலை 35 வயது இளம்பெண் ஒருவர், ரத்த கறையுடன் ஒரு பையை கொண்டு வந்து நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். தொடர்ந்து ஏதோ பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தார். அப்போது அங்கிருந்த இளைஞர்கள், கால்நடைகளை மேய்ப்பவர்கள் இங்கு ஏன் நிற்கிறீர்கள், பையில் என்ன உள்ளது என கேட்டுள்ளனர்.

ஆனால் அவர் வெறும் கோழி தலை மற்றபடி வேறேதும் இல்லை எனக்கூறி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வந்துள்ளார். தொடர்ந்து பெண் வைத்திருந்த பையில் நரபலி கொடுக்கப்பட்ட குழந்தையின் உடலை வைத்து மாந்திரீகம் செய்ய வந்திருப்பதாக அந்த பகுதி விஏஓ மோகனா, கே.வி.குப்பம் காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதில் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் ரத்த கறையுடன் கிடந்த பையை சோதனை செய்தபோது, அதில் பூசணிக்காய், கோழி தலை உட்பட மாந்திரீகம் செய்ய பொருட்களை கொண்டு வந்திருந்தார்.

அவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் வேலூர் அருகே உள்ள ஒரு மாந்திரீகர் ஆலோசனையின்பேரில் இந்த பொருட்களை வைத்து இங்கு பூஜை செய்ய வந்திருந்ததாகவும் அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பொருட்களை அங்கேயே தீயிட்டு கொளுத்திய போலீசார், அந்த பெண்ணை கே.வி.குப்பம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தந்தைக்கு உடல் நலம் குணமாக வேண்டும் என்பதற்காக தான் செய்தேன். என்னை மன்னித்து விடுங்கள் என கண்ணீர் மல்க கூறிய பெண்ணை போலீசார் எச்சரிக்கை செய்து எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பினர். இதற்கிடையில் கிராமத்தில் குழந்தையை நரபலி கொடுத்து மாந்திரீக பூஜை செய்யப்பட்டதாக தகவல் பரவி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.