Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

‘ரூ.2 ஆயிரம் கொடுத்தால்தான் செய்ய முடியும்’ வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு லஞ்சம்: ஊழியரின் வீடியோ வைரல்

வேலூர், ஜூலை 30: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.2 ஆயிரம் கொடுத்தால் தான் பிரேத பரிசோதனை செய்ய முடியும் என ஊழியர் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரத்துக்குக்கு மேற்பட்ட உள்நோயாளிகளும், புறநோயாளிகளும் மருத்துவசிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அண்டை மாநிலமான சித்தூரில் இருந்தும் பொதுமக்கள் சிகிச்சை பெற வருகின்றனர். இதனால் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்க கூடிய மருத்துவமனையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ஒடுகத்தூர் அருகே ஒரு மலை கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் சடலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு பணியாற்றும் ஊழியர்களில் ஒருவர், இறந்தபோன வாலிபரின் உறவினர்களிடம் ‘பிரேத பிரசோதனை செய்ய தேவையான பொருட்களை வாங்க வேண்டும். அதற்கு ரூ.2 ஆயிரம் செலவாகும். எனவே பணத்தை விரைந்து கொடுத்தால் தான் பிரேத பரிசோதனை செய்ய முடியும்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர் கேட்ட ரூ.2 ஆயிரத்தை அந்த ஊழியரிடம் கொடுத்துள்ளனர். அதன்பிறகு தான் பிரேத பரிசோதனை செய்யும் பணியை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஏற்கனவே உயிரிழந்தவர்களின் உடல்களை பெற்று செல்ல வரும் உறவினர்கள் துக்கத்திலும் மனவேதனையிலும் இருக்கும் சூழலில், அவர்களிடம் லஞ்சம் கேட்டு வற்புறுத்தி பெற்ற சம்பவம் மலைவாழ் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பல்வேறு பகுதியிலிருந்து விபத்து மற்றும் அசாதாரண சூழ்நிலைகளில் இருந்து சிகிச்சை பெற வருகின்றனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி இறந்து போகும் நபர்களின் சடலங்களை பிரேத பரிசோதனை செய்து முடிக்கவும், உடலை விரைவாக ஒப்படைக்கவும், அங்கிருக்கும் ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.

பணம் தர மறுத்தால் உடலை ஒப்படைக்க தாமதம் செய்கிறார்கள். மரியாதை குறைவாக நடத்துவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பிணவறையில் கூட பணத்தை கொடுத்துவிட்டு தான் சடலத்தை பெற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், மருத்துவக்கல்லூரி முதல்வரும் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.