Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொன்னை அருகே ரேணுகாம்பாள் கோயிலில் காணிக்கை பணம் திருடிக்கொண்டு உண்டியலை ஏரியில் வீசிய கும்பல்: போலீசார் தீவிர விசாரணை

பொன்னை, செப்.28: பொன்னை அருகே உள்ள ரேணுகாம்பாள் கோயிலில் புகுந்து காணிக்கை பணத்தை திருடிக்கொண்டு, காலி உண்டியலை அருகே உள்ள ஏரியில் வீசிவிட்டு தப்பிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அருகே உள்ள கீரைசாத்து கிராமத்தில் பழமை வாய்ந்த ரேணுகாம்பாள் கோயில் உள்ளது. கீரைசாத்து உள்பட சுற்றுப்புற 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு சொந்தமான இக்கோயில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த ஆடி மாதம் இக்கோயிலில் தீமிதி விழா நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அப்போது கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை கோயிலுக்கு சென்ற பூசாரி, கோயில் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியலை காணவில்லை. இதை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து கிராம மக்களுக்கும், பொன்னை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், கோயிலில் விசாரணை நடத்தினர். பின்னர் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது அருகில் உள்ள ஏரியில் காலி உண்டியல் வீசப்பட்டிருந்து. கோயில் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் உண்டியலை தூக்கிச்சென்று அதில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு உண்டியலை வீசிவிட்டு சென்றுள்ளனர். மேலும் அந்த உண்டியலில் பக்தர்கள் பிரார்த்தனையாக செலுத்திய தங்க நகைகளும் இருந்திருக்கலாம் எனவும், அவற்றையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, உண்டியல் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். ரேணுகாம்பாள் கோயிலில் உண்டியல் பணம் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.