கூட்டுறவு துறையில் பொதுமக்கள், பணியாளர்களின் குறைகளை தெரிவிக்க வாட்ஸ்அப் எண்; அலுவலகங்களில் காட்சிப்படுத்த அறிவுறுத்துதல்
வேலூர், செப்.28: கூட்டுறவுத் துறையில் பொதுமக்கள், பணியாளர்களின் குறைகளைத் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ் அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை அனைத்து அலுவலகங்களில் காட்சிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம், அனைத்து மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அதீத முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அதிக அளவிலான புதிய மனுக்கள் தினசரி பெறப்பட்டு வரும் நிலையிலும், துரித நடவடிக்கைகளின் மூலமாக பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அதீத முன்னுரிமை அளிக்கப்பட்டு, கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்களிலும் எவ்வித தேக்கமுமின்றி, நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப்படி அனைத்து மனுக்களுக்கும் தீர்வு கண்டு விரைந்து முடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொதுமக்கள், விவசாயிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் துறைப் பணியாளர்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மேலும் எளிதாகவும் விரைவாகவும் தலைமை அலுவலகத்திற்கு நேரடியாகத் தெரிவிக்கும் வகையில், 9884000845 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண் கூட்டுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ குறைதீர்வு எண்ணாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய குறைதீர்வு நடைமுறையினை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் அனைத்து மண்டல மற்றும் சரக அலுவலர்களும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் மற்றும் குறைதீர்வு வசதி குறித்த விவரங்களை, அனைத்து மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள், சரக துணைப்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கூட்டுறவுச்சங்கங்கள், நிறுவனங்களின் (நியாய விலைக் கடைகள் உட்பட) தகவல் பலகையில் பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் எளிதில் அறியும் வகையில் பெரிய எழுத்துக்களில் உடனடியாக காட்சிப்படுத்த வேண்டும்.
சங்கங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள், விவசாயிகள் மற்றும் உறுப்பினர்களிடம் இந்த வாட்ஸ்அப் குறைதீர்வு வசதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, குறைகளை நேரடியாக தெரிவிக்க வழிகாட்ட வேண்டும். இந்த அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் வாயிலாக பெறப்படும் புகார்கள் இ-ஆபீஸ் தளத்தில் பதியப்பட்டு சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு அல்லது தொடர்புடைய பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இம்மனுக்கள் மீது எவ்வித தேக்கமுமின்றி கால அட்டவணையின்படி தீர்வு காணப்பட வேண்டும்.
முதல் வாரத்தில், வட்டார அளவில் கூட்டுறவு சார் பதிவாளர்கள் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று கோரிக்கை மனுக்களைப் பெற்று அதனைத் தகுதியின் அடிப்படையில் தீர்வு செய்ய வேண்டும். 2வது வாரத்தில் கூட்டுறவு சார் பதிவாளர்கள் அளவில் தீர்வு செய்ய இயலாத கோரிக்கை மனுக்களையும், துணைப்பதிவாளர்களால் நேரடியாகப் பெறப்படும் கோரிக்கை மனுக்களையும் துணைப்பதிவாளர்கள் தகுதியின் அடிப்படையில் தீர்வு செய்ய வேண்டும்.
மூன்றாம் வாரத்தில் தீர்வு செய்ய இயலாத கோரிக்கை மனுக்களையும், மண்டல இணைப்பதிவாளர்களால் நேரடியாகப் பெறப்படும் கோரிக்கை மனுக்களையும், மண்டல இணைப்பதிவாளர்கள் தகுதியின் அடிப்படையில் தீர்வு செய்ய வேண்டும். 4வது வாரத்தில் மாவட்டத்தில் மாமண்டல அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும். அடுத்த மாத முதல் வாரத்தில் பதிவாளர் தலைமையில் மண்டல அலுவலர்கள் மற்றும் தலைமை அலுவலக கூடுதல் பதிவாளர்களுடன் கூட்டு ஆய்வுக் கூட்டம் நடக்கும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

