Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேலூர் காகிதப்பட்டறையில் தொடரும் அவலம்; டாஸ்மாக் மது குடித்துவிட்டு ஏடிஎம் ஏசி காற்றில் படுத்து தூங்கிய குடிமகன்: அவசரத்திற்கு பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதி

வேலூர், மே 28: வேலூர் டாஸ்மாக் கடையில் மதுகுடித்துவிட்டு அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஏசி காற்றுடன் படுத்து தூங்கிய குடிமகனால் பணத்தை எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வேலூர்- ஆற்காடு சாலையில் காகிதப்பட்டறையில் அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகள் பகல் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. கடை திறப்பதற்கு முன்பே காலை 11 மணிக்கு குடிமகன்கள் குவிந்துவிடுகிறார்கள். 12 மணிக்கு கடை திறந்ததும் முண்டியடித்து கொண்டு மதுவாங்கி செல்கின்றனர். அதேபோல் மாலை 6 மணிக்கு மேல் திருவிழா கூட்டம் போல குடிமகன்கள் திரண்டு விடுகிறார்கள்.

மது பாட்டில்கள் வாங்கி கொண்டு வந்து சாலையோரத்தில் குடித்துவிட்டு அங்கேயே படுத்துவிடுகிறார்கள். பலரும் அரைநிர்வாணத்துடன் பல இடங்களில் போதையில் விழுந்து கிடப்பது தான் அனைவரையும் முகம் சுளிக்கும் வகையில் இருந்து வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகளால் அவ்வழியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன தான் தீர்வு என்று தெரியாமல் அப்பகுதி பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். காகிதபட்டறையில் டாஸ்மாக் கடை அருகே ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களை விட மதுகுடித்துவிட்டு படுத்தும் தூங்கும் வாடிக்கையாளர்கள் தான் அதிகமாக உள்ளனர்.

கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துவிட்டு அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஏசி காற்றில் தூங்கும் சம்பவங்கள் தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் குடிமகன்கள் அரைநிர்வாண கோலத்தில் இருப்பதை பார்த்து பதறி அடித்துக் கொண்டு வங்கி வாடிக்கையாளர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். பணம் எடுக்க முடியாமல் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். போலீசார் ஏடிஎம் மையத்தின் எதிரே மது குடிக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதை எல்லாம் கண்டுக்கொள்வது இல்லை. காசு கொடுத்து ஓட்டலில் ஏசி காற்று வாங்குவதற்கு பதிலாக இப்படி ஏடிஎம் மையத்தில் இலவசமாக ஏசி காற்று வாங்கி தூங்குவதற்கு போட்டா போட்டியே நடந்து வருகிறதாம்.

பொது இடத்தில் மது குடிக்கும் நபர்களை தடுக்க முன்பு போலீசார் தீவிரமாக கண்காணித்து அங்கிருந்து விரட்டி அடிப்பார்கள். குடிமகன்களும் மது வாங்கி கொண்டு மது குடிக்க வேறு இடங்களுக்கு சென்றுவிடுவார்கள். ஆனால் தற்போது போலீசார் அதை கண்டுக்கொள்வது இல்லை. இதனால் குடிமகன்கள் சுதந்திரமாக பட்டப்பகலில் பொது இடங்களில் குடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையினை அகற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.