Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

விளையாட்டு போட்டியில் பங்கேற்று விட்டு சாலையோரம் நடந்து சென்றபோது கார் மோதி 7 மாணவிகள் படுகாயம்: அணைக்கட்டு அருகே பரபரப்பு

அணைக்கட்டு, ஆக‌.26: அணைக்கட்டு அருகே விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று விட்டு சாலையோரம் நடந்து சென்றபோது கார் மோதியதில் பள்ளி மாணவிகள் 7 பேர் படுகாயம் அடைந்தனர். வேலூர் வட்டார அளவிலான அரசு பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 2026-2027ம் ஆண்டிற்கான குழு விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில் வேலூர் வட்டாரத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று விளையாடினர்.

தொரப்பாடி அரசு மேல்நிலை பள்ளி மாணவிகள் விளையாட்டு போட்டிகள் முடிந்து மதிய நேரத்தில் தங்கள் பள்ளிக்கு செல்ல பஸ் ஏறுவதற்காக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். ஜமால்புரம் முதல் ஊசூர் குளத்துமேடு வரை மாணவிகள் நடந்து சென்றனர். அவர்களை அழைத்து வந்த பள்ளி ஆசிரியை பின்னால் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேலூரில் இருந்து அவ்வழியாக வேகமாக வந்த கார் மாணவிகள் மீது மோதியதில் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த அருகே கடையில் இருந்தவர்கள் அப்பகுதி மக்கள் காருக்கு அடியில் சிக்கிய மாணவிகளை காயங்களுடன் மீட்டு அமர வைத்து தண்ணீர் கொடுத்து அமைதிப்படுத்தினர்.

தகவலறிந்த அப்பகுதி மக்கள், அவ்வழியாக சென்றவர்கள் அங்கு திரண்டனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் மற்றும் கார் மூலம் படுகாயம் அடைந்த மாணவிகளை உடனடியாக வேலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அங்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அங்கு வந்த அரியூர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். மாணவர்களுக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வேகமாக காரில் வந்து மோதிய நபர் பள்ளி ஆசிரியரின் கணவர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் விடக்கூடாது என புகார் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்ந்து, காரில் வந்து மோதிய நபர் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனிடையே காயமடைந்த பள்ளி மாணவிகளின் பெற்றோர் வேலூர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், விளையாட்டுப் போட்டிக்கு வந்து திரும்பிச் சென்ற தொரப்பாடி அரசு மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் 14, 15 வயதுடைய மாணவிகள் 10 பேர் போட்டி முடிந்து பஸ் ஏறுவதற்காக நடந்து சென்றுள்ளனர்.

இதில் 7 மாணவிகள் முன்னால் சென்ற நிலையில் 3 மாணவிகள் ஆசிரியருடன் பின்னால் வந்து கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் மோதியதில் மாணவிகள் காயம் அடைந்தது தெரிய வந்தது. மேலும், கார் ஓட்டி வந்த வேலூரை சேர்ந்த ஊசூர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் கணவர் சரவணன்(62) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.