ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கியுள்ளது தடய அறிவியல் துறைக்கு 47 அதிநவீன வசதிகளுடன் நடமாடும் புதிய ஆய்வக வாகனங்கள்
* ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யும் பணிகள் தீவிரம்
* விரைவில் மாவட்ட எஸ்பிக்கள் மூலம் பயன்பாட்டிற்கு வருகிறது
ேவலூர், ஆக.28: ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும், தடய அறவியல் துறைக்கு 47 அதி நவீன வசதிகளுடன் நடமாடும் புதிய ஆய்வக வாகனங்கள் வழங்கியுள்ளது. இந்த வாகனங்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் மாவட்ட எஸ்பிக்கள் மூலம் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியா முழுவதுமாக அனைத்து மாநிலங்களிலும் தடய அறவியில் துறை மிக முக்கிய பிரிவாக இயங்கி வருகிறது. வெடிகுண்டு வெடிப்பு, கொலை, விபத்து உள்ளிட்ட அனைத்து குற்ற நிகழ்வுகளுக்கும் முதலில் ஆய்வுக்கு அழைக்கப்படுவது தடய அறிவியல் துறை தான். இந்த துறையினை தற்போது அதிநவீன துறையாக மாற்ற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி தமிழ்நாட்டிற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் பயன்படுத்த 47 அதி நவீன நடமாடும் புதிய ஆய்வக வாகனங்கள் வழங்கியுள்ளது. இந்த வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் நவீன கேமராக்கள், பொருத்தப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, விபத்து, வெடிகுண்டு, வெடிகுண்டாக இருந்தால் எந்த வகையான வெடிகுண்டு, போதை பொருள் பயன்படுத்தப்பட்டிருந்தால் எந்த வகையான போதை மருந்து, கை ரேகைகள் உள்ளிட்ட அனைத்தையும் சம்பவம் நடந்த இடத்திலேயே ஆய்வு செய்யும் வகையில் 12 வகையான ஆய்வக கருவிகள் கொண்ட வாகனமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதி நவீன வாகனங்கள் அனைத்தும், அந்தந்த ஆர்டிஓ அலுவலகங்களில் பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தடய அறிவியில் இணை இயக்குனர் வடிவேலு தலைமையில், வேலூர் தடய அறிவியல் பிரிவு அலுவலர் சொக்கநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகனங்களை வேலூர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேற்று கொண்டு வந்தனர்.அப்போது, ஆர்டிஓ சுந்தர்ராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் அதி நவீன வாகனத்தை பதிவு செய்யும் பணியினை மேற்கொண்டனர். வேலூர் சரகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு 4 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் பதிவு செய்யும் பணிகள் முடிந்த பின்னர், விரைவில் அந்தந்த மாவட்ட எஸ்பிக்கள் மூலமாக பயன்பாட்டிற்கு வரும் என்று தடய அறிவியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடயங்களை ஆய்வு செய்து அங்கேயே முடிவு தெரிவிக்கும் குற்ற சம்பவங்கள், சட்டவிரோத சம்பவங்கள் நடந்தால், சம்பவம் நடந்த இடத்தில் தடயங்கள் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில், கேமரா வசதிகளுடன் அதி நவீன நடமாடும் தடய அறிவியல் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்கள் நடந்தால், அழைக்கப்பட்ட உடனே, சம்பவ இடங்களுக்கு சென்று, அங்கேேய ஆய்வு செய்து அதற்கான முடிவுகளை உடனே தெரிவிக்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் இந்த நடமாடும் வாகனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் இந்த வாகனங்களை பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளது. ஓரிரு வாரங்களில் இவை பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



