வேலூர் மாங்காய் மண்டி அருகே உள்ள நிக்கல்சன் கால்வாய் தூர்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு: விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
வேலூர், ஆக.26: வேலூர் மாங்காய் மண்டி அருகே உள்ள நிக்கல்சன் கால்வாய் தூர்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு செய்து, விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வேலூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதாகவும், பருவமழைக்கு முன்பாக கால்வாய் தூர்வார வேண்டும் என்று தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் விரிவாக செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக வேலூர் மாங்காய் மண்டி அருகே உள்ள நிக்கல்சன் கால்வாயை தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது. இப்பணியை கலெக்டர் லீலா அலெக்ஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மழைக்காலத்திற்கு முன்பாக இக்கால்வாயை தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, வேலூர் கொணவட்டம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். பொதுமக்களிடம் மருத்துவரின் அணுகுமுறை, சிகிச்சை முறை, அடிப்படை வசதி குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவரிடம் பொதுமக்களின் வருகை விவரம், மருந்துகளின் இருப்பு விவரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் சுகாதார நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டியை ஆய்வு செய்தார். தொடர்ந்து, கொணவட்டம் நியாய விலைக்கடையை பார்வையிட்டு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து, அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் மழைநீர் வடிகால் பணியினை துரிதப்படுத்தவும் மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் வேலூர் மாநகராட்சி, காட்பாடி பாரதிநகரில் உள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்து, உணவினை சுவைத்து பார்த்து ஆய்வு செய்து, பொதுமக்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், உணவத்தை சுத்தமாக வைத்து கொள்ளவும், சுகாதாரமான முறையில் சமைக்கவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, வேலூர் வள்ளலாரில் உள்ள எம்ஜிஆர் சிறுவர் பயிற்சி நீச்சல் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நீச்சல் குளத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதைதொடர்ந்து வேலூர் மாநகராட்சி, அண்ணாசாலையில் உள்ள திறந்தவெளி மேடை கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, கடைகளை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், வியாபாரிகளின் கோரிக்கை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி ஆணையாளர் சுல்தானா, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், மாநகர நல அலுவலர் பிரதாப்குமார், தாசில்தார்கள் பழனி, மகேஸ்வரி உட்பட பலர் உடனிருந்தனர்.



