Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வேலூர், ஆரணி, ஆற்காடு, மாதனூரில் நகராட்சி, பிடிஓ, தாலுகா அலுவலகங்களில் திடீர் விஜிலென்ஸ் ரெய்டில் ரூ.70,000 பறிமுதல்: ரூ.2.82 லட்சம் ஜிபே பரிவர்த்தனையும் கணக்கெடுத்து விசாரணை

வேலூர், ஆக.28: தமிழ்நாடு முழுவதுமாக நகராட்சி அலுவலகங்கள், பிடிஓ அலுவலகங்களில் ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட பலரிடம் லஞ்சம் பெறுவதாக விஜிலென்ஸ் போலீசாருக்கு புகார்கள் சென்றது. அதன்படி நேற்று தமிழ்நாடு முழுவதுமாக அதிரடியாக ரெய்டு நடத்தினர். அதன்படி வேலூர் பிடிஓ அலுவலகத்தில் நேற்று மதியம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் மைதிலி மற்றும் போலீசார் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் அதிரடியாக நுழைந்து, அலுவலகத்தின் கதவு மூடப்பட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் ரூ.9,500 பணத்தை பறிமுதல் செய்தனர். அலுவலகத்தில் இருந்தவர்களிடம் செல்போன்களில் ஜிபே உள்ளிட்ட ஆன்லைன் பணம் பரிமாற்றம் குறித்து ஆய்வு செய்ததில் கணக்கில் வராத ரூ.1.91 லட்சம் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றது தெரியவந்தது. இரவு வரை ரெய்டு நடந்தது.

அதேபோல் ஆரணி நகராட்சியில் திருவண்ணாமலை விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர்கள் ஹேமாமாலினி, அருள் பிரசாத் தலைமையிலான 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் மாலை 3 மணி அளவில் நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஆரணி நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு நடப்பது தெரிந்த, ஆரணியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் மாலை 5 மணி அளவில் பூட்டிக் கொண்டு, அதிகாரிகள் அவசர அவசரமாக வெளியே சென்றனர். இதில் கணக்கில் வராத ரூ.33 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பிடிஓ அலுவலகத்தில், நேற்று மதியம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராஜூ தலைமையில் இரு கார்களில் வந்த குழுவினர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் முருகன், மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி செயலாளர்களுடன் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. பலரது செல்போன்களில் ஜிபே, போன் பே பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தனர். ரெய்டு செய்தி அறிந்த ஒப்பந்ததாரர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து இரவு 7 மணியளவில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் முருகனின் பையில் இருந்து ரூ.19,500ஐ விஜிலென்ஸ் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு கஸ்பா பகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை டிஎஸ்பி கணேசன் தலைமையில் துணை ஆய்வுக்குழு அலுவலர் ஜெகதீஸ்வரன், லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகிய 6 பேர் கொண்ட குழுவினர் தாலுகா அலுவலகம் உள்ளே சென்றனர். இரவு வரை நடந்த போலீசாரின் சோதனையில் அலுவலகத்தில் இருந்த ஒரு நபரிடம் இருந்து ரூ.8 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மேலும் ஜிபே மூலமாக ரூ1.25 லட்சம் பணம் பரிமாற்றம் நடந்துள்ளது தெரிய வந்தது. வேலூர், ஆரணி, மாதனூர், ஆற்காடு ஆகிய பகுதிகளில் நகராட்சி, பிடிஓ, தாலுகா அலுவலகத்தில் நடந்த ரெய்டில் கணக்கில் வராத பணம் உட்பட ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஜிபே பரிவர்த்தனை ரூ.2.82 லட்சம் பரிவர்த்தனை செய்யப்பட்டது ெதரியவந்தது. ெதாடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.