Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது; ரயில்வே சட்டங்களில் அதிரடி மாற்றத்தால் அபராதங்கள் பல மடங்கு உயர்வு: பெண்கள் பெட்டியில் நுழைந்தால் ரூ.2,500 அபராதம்

வேலூர், ஜூன் 26: ரயில்வே சட்டங்களில் அதிரடி மாற்றத்தால் அபராதங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரயில்வே சட்ட திட்டங்களை எளிமைப்படுத்தவும், விதிமீறல்களைத் தடுக்கவும் இந்திய அரசு ஜன் விஸ்வாஸ் (நிபந்தனைகள் திருத்தச் சட்டம்) 2026ன் கீழ் 1989ம் ஆண்டைய ரயில்வே சட்டத்தில் பல்வேறு முக்கிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த புதிய சட்டத்திருத்தங்களின் படி, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விதிகளை மீறுபவர்களுக்கான அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது, ரயில் டிக்கெட் இன்றி பயணம் செய்பவர்களுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச கூடுதல்கட்டணம் 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அபராதம் செலுத்த மறுத்தால் மட்டுமே நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதனுடன் பல்வேறு சட்ட திருத்தங்கள் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்தின் படி ஆண்கள் தடையை மீறி பெண்கள் பெட்டியில் நுழைந்தால், இனி 2,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்தத் தவறினால் 5,000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்க நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மற்றவர் பெயரில் உள்ள பயணச்சீட்டில் பயணம் செய்தால், இனி பயணச்சீட்டு ரத்து செய்யப்படுவதோடு, பயணக் கட்டணம் மற்றும் குறைந்தபட்சம் 500 ரூபாய் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படும். ரயில்வே சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில செயல்கள் மூலம் பயணிகளின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவித்தால், அபராதம் முறையே 2,000 ரூபாய் மற்றும் 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கொண்டு செல்லும் சரக்குகள் குறித்துத் தவறான அல்லது பொய்யான தகவல்களை அளித்தால், ஒன்றிய அரசு அவ்வப்போது அறிவிக்கும் தொகைக்கு இணையான அபராதம் விதிக்கப்படும்.

ரயில்களில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வெடிபொருட்கள் அல்லது ஆபத்தான பொருட்களைக் கொண்டு வருபவர்களுக்கு, இழப்பீட்டுடன் சேர்த்து குறைந்தபட்சம் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த குற்றத்திற்கான சிறைத்தண்டனை 3 மாதங்களாகக் குறைக்கப்பட்டிருந்தாலும், அபராதத் தொகை 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளங்கள் அல்லது தடை செய்யப்பட்ட பகுதிகளில் நுழைபவர்களுக்கு முதல் முறை 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இந்த புதிய சட்டத் திருத்தங்களின் சிறப்பம்சமே, பெரும்பாலான சிறு குற்றங்கள் குற்றத்தன்மை நீக்கம் செய்யப்பட்டுள்ளன. அதாவது, குற்றம் செய்பவர்கள் உடனடியாக அபராதம் செலுத்திவிட்டால் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கலாம். அபராதத் தொகையைச் செலுத்த மறுப்பவர்கள் அல்லது தொடர்ந்து அதே குற்றத்தைச் செய்பவர்கள் மீது மட்டுமே நீதிமன்றம் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் ரயில்வே விதிகளை முறையாகப் பின்பற்றி பாதுகாப்பான மற்றும் அமைதியான பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரயிலில் மது அருந்தினால் இனி சமூக சேவை செய்ய வேண்டும்

ரயிலில் மது அருந்துபவர்கள் அல்லது மற்றவர்களுக்கு இடையூறு செய்தால் ரயிலில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். அவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, முதல்முறையாக ‘சமூக சேவை' செய்யும் நூதன தண்டனையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் யாசகம் எடுப்பவர்கள் அல்லது அனுமதியின்றி வியாபாரம் செய்பவர்களுக்கு முதல் முறை குற்றத்திற்காக 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ரயிலில் பயணிகள் கண்ணியமற்ற முறையில் அல்லது தவறாக நடந்துகொண்டால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, ரயிலில் இருந்தும் உடனடியாக இறக்கிவிடப்படுவார்கள்.