Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பென்னை அருகே சோகம்: மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் திருமணமான 8 மாதத்தில் ராணுவ வீரர் தற்கொலை

பொன்னை, மே 26: பொன்னை அருகே மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் திருமணமான 8 மாதத்தில் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பொன்னை மாதா கோயில் பகுதியை சேர்ந்தவர் வினோத்(30). இவர் செகந்திராபாத்தில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பிரித்திகா(28) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கணவன், மனைவி இருவரும் செகந்திராபாத்தில் வசித்து வந்தனர். இதற்கிடையில் வினோத்துக்கு 20 நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், வினோத்துக்கு மதுபழக்கம் இருந்ததால், மனைவி பிரித்திகா கோபித்துக்கொண்டு பொன்னையிலிருந்து தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த வினோத் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பொன்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 8 மாதத்தில் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.